Islamic Widget

February 12, 2014

எரிவாயு விலையை நிர்ணயிப்பதில் முறைகேடு


gas-fuel-poverty-4_1002893cபுதுடெல்லி:எரிவாயு விலையை முறைகேடாக நிர்ணயித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் அமைச்சர் முரளி தேவ்ரா, ரிலையன்ஸ் இண்டஸ்டஸ்டிரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யும்படி தில்லி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.
மேலும், லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை முடிவடையும் வரை சமையல் எரிவாயு பயன்பாட்டுக் கட்டணத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து டெல்லி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
“கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் இருந்து எரிவாயு வளங்களைப் பெறும் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
அதன்படி, இயற்கை எரிவாயு உற்பத்தி செய்து, அதை தேசிய அனல் மின் நிலையத்துக்கு விநியோகம் செய்ய வேண்டும். இதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் 17 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் தலா 10 லட்சம் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் எரிவாயு, 2.3 அமெரிக்க டாலருக்கு வாங்க விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மொத்த உற்பத்திச் செலவு ஒரு டாலருக்கும் குறைவாகத்தான் ஆகும். இந் நிலையில், பெட்ரோலிய அமைச்சராக முரளி தேவ்ரா இருந்தபோது இந்த விலை 4.2 டாலராக உயர்த்தப்பட்டது.
கடந்த ஆண்டு பெட்ரோலியத் துறை அமைச்சராக வீரப்ப மொய்லி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எரிவாயு கட்டணத்தை நிர்ணயிக்கலாம் என்று புதிய விதியை கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது. இதனால், வரும் ஏப்ரல் மாதம் முதல் எரிவாயு கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்படும். அதாவது ஒரு யூனிட் எரிவாயுவை ரூ. 8 டாலர் வரை கொடுத்து வாங்க வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்படும். இந்த நிதிச்சுமை வாடிக்கையாளர் மீதுதான் திணிக்கப்படும்.
இந் நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 10-16 தேதி நிலவரப்படி மொத்தம் ஒதுக்கப்பட்ட 18 எரிவாயு வயல்களில் 9-இல் மட்டுமே ரிலையன்ஸ் நிறுவனம் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்துவருவது தெரியவந்தது.
மேலும், அனைத்து வயல்கள் மூலம் 18 சதவீத எரிவாயு மட்டுமே உற்பத்தி செய்ய முடிவதாகவும் கூறி, செயற்கையாக எரிவாயுத் தட்டுப்பாட்டை ரிலையன்ஸ் உருவாக்கியது. மீதமுள்ள 9 வயல்கள், பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாமல் மூடப்பட்டுள்ளன. ஆனால், அதைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டு, எரிவாயு உற்பத்தி விலையை தற்போது அதிகரிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த வயல்களின் செயல்பாடுகளை மதிப்பிட்ட மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர், முதலீட்டுச் செலவைவிட பல மடங்கு லாபத்தை ரிலையன்ஸ் பெற்றுள்ளதாக கூறியது. மேலும், செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கும் மோசடிக்கு ஹைட்ரோ கார்பன் இயக்குநரக தலைமை இயக்குநர் அலுவலகமும் துணைபுரிந்துள்ளது.
இது தொடர்பாக, மூத்த குடிமக்களான முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம், முன்னாள் கடற்படைத் தளபதி ஆர்.எச். தாஹிலியானி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஈ.ஏ.எஸ். சர்மா, உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் காமினி ஜெய்ஸ்வால் ஆகியோர் டெல்லி அரசுக்குப் புகார் அளித்துள்ளனர். அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல. இந்த நாட்டின் வளம், வருவாய் தொடர்புடையவை.
டெல்லிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் குழாய் மூலம் எரிவாயுவை வழங்கிவருகிறது. அந் நிறுவனத்துக்கு உற்பத்திக் கட்டணத்தை அதிகரித்து வழங்குவதால் அந்த நிதிச்சுமை வாடிக்கையாளர் மீது திணிக்கப்படும் நிர்பந்தம் ஏற்படும். அதைத் தடுக்கும் வகையில், டெல்லி அரசின் அதிகார வரம்புக்கு உள்பட்டு முரளி தேவ்ரா, வீரப்ப மொய்லி, முகேஷ் அம்பானி, ஹைட்ரோ கார்பன் தலைமை இயக்குநர் வி.கே. சிபல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்படி டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
கடந்த 10 ஆண்டுகளில் நான்கு அமைச்சர்களை பெட்ரோலியத் துறை கண்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டுக்குத் துணை போக மறுத்த பெட்ரோலியத் துறை அமைச்சர்களான மணிசங்கர் ஐயர், ஜெய்பால் ரெட்டி ஆகியோர் வேறு துறைக்கு முந்தைய காலங்களில் மாற்றப்பட்டனர். இந்த விசாரணை மூலம் நாட்டை வழிநடத்துவோரிடம் செல்வாக்கைப் பயன்படுத்தும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும் என நம்புகிறோம்’ என்றார் கெஜ்ரிவால்.
 

No comments:

Post a Comment