Islamic Widget

March 30, 2011

திரில் போட்டியில் இந்தியா,பாகிஸ்தான் மோதல்

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின், பலரும் எதிர்பார்த்த திக், திக், திரில் அரையிறுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த போட்டியின் டென்ஷனை ஏற்றுவதற்கேன்றே இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள் இதனை பெருமளவு ஊதிப்பெருக்கி வருகின்றன. இதனாலெல்லாம் ரசிகர்கள் டென்ஷன் ஆக வேண்டிய நிர்பந்தம் இல்லை. தேசியவாத வெறியைத் தூண்டும் விதமாக ஊடகங்கள் செயல் படுகின்றன.
 ரசிகர்கள் இதனை மனதில் கொள்ளாமல் கிரிக்கெட்டை மட்டும் பார்ப்பது சிறந்தது.சற்றும் எதிர்பாராத விதத்தில் பாகிஸ்தான் இந்த அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. மாறாக இந்தியா கோப்பையை வெல்லும் அணி என்று கொண்டாடப்பட்டு வருகிறது.பாகிஸ்தான் அணியைப்பொறுத்தவரை நம்ப முடியாத அணி, கணிக்க முடியாத அணி என்ற லேபிளில்தான் நாளையும் களமிறங்கவுள்ளது. பேட்டிங்கில் கம்ரன், ஹஃபீஸ் துவக்கத்தில் கொஞ்சம் நிலைத்து ஆடினால், ஷஃபீக், யூனிஸ் கான், உமர் அக்மல், மிஸ்பா உல் ஹக் வரை தாக்குப் பிடித்து கடைசி 5 ஓவர்களில் ரசாக், அஃப்ரீடி அதிரடி காட்டினால் அந்த அணி முதலில் பேட் செய்யும் பட்சத்தில் 250- 260 ரன்களை எட்ட வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்திய பந்து வீச்சு இதுவரை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.மாறாக இந்தியா முதலில் பேட் செய்து அதிகம் இல்லாவிட்டாலும் 260- 270 ரன்கள் எடுத்தால் இலக்கைத் துரத்தும் போது பாகிஸ்தான் அணி சரிவடைய வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் அந்த பேட்டிங் லைன் அப் தோனி கொடுக்கும் நெருக்கடியை சமாளிக்குமா என்று தெரியவில்லை.ஷோயப் அக்தரை கொண்டு வந்தால் இந்திய வீரர்கள் திணறுவார்கள் என்று பாகிஸ்தான் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அது மிகப்பெரிய ரிஸ்க். சேவாக், சச்சினுக்கு அவர் ஒரு அதிரடி துவக்கத்தை வழங்கினால் ஆட்டம் பாகிஸ்தான் கையிலிருந்து பிடுங்கப்பட்டதாகும். பிறகு ஷோயப் அக்தர் ஒன்றும் அச்சுறுத்தும் பந்து வீச்சாளராகவும் இல்லை. இடையில் ஓரிரு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தும் திறன் இல்லை. மேலும் இறுதி ஓவர்களில் ரன்களை கடுமையாக வழங்கி வந்துள்ளார். எனவே அவரை அணியில் எடுப்பது ரிஸ்க் ஆகும். இதனை அஃப்ரீடி செய்யத் தயங்குவார் என்றே கருதலாம்.பிறகு இரு அணிகளுக்குமே வெற்றி அணியை மாற்றக்கூடாது என்ற மூடநம்பிக்கை இருக்கிறது. அதனால் அக்தர் கடினம்தான்.நாளை முனாஃப் படேலை நீக்கும் முடிவையும் தோனி எடுக்கக் கூடாது. ஏனெனில் குறைந்தது அவருக்கு இத்தனை டென்ஷன் போட்டிகளில் பந்து வீசிய அனுபவமாவது இருக்கிறது. ஸ்ரீசாந்தை அணியில் எடுத்து அவர் ஓவர் உற்சாகப்பட்டு அங்கும் இங்கும் வீசி ஆட்டத்தைக் கெடுத்து விடும் வாய்ப்பு உள்ளது. மேலும் முனாஃப் படேல் திறமை குறைவான பேட்டிங் வரிசைக்கு எதிராக ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசி விக்கெட்டுகள் எடுப்பார்.
நாளை முனாஃப் படேலின் தினமாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இந்திய அணியின் பேட்டிங்கில் நாளை பாகிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தல் சச்சின் டெண்டுல்கர் அவரது 100-வது சதம் அருகில் உள்ளது. மேலும் சேவாக் பாகிஸ்தான் என்றாலே தனி ஆட்டம் விளையாடுவார். எனவே அழுத்தம் பாகிஸ்தான் பக்கமே உள்ளது.மேலும் பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் இவ்வளவு தூரம் வந்ததே எதிர்பாராதது. அதனால் இந்தியாவுடன் தோற்கிறோமே என்ற ஒரு விஷயம்தான் உறுத்தலாக இருக்குமே தவிர மற்றபடி அவர்களுக்கு இது நல்ல உலகக் கோப்பைதான், இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று அந்த அணி விளையாடும்போது இந்தியாவுக்கு ஒரு விதத்தில் அது அபாயகரமானதாக அமையலாம்.
ரசிகர்கள் உற்சாகத்திற்காக இந்திய அணி விளையாடக்கூடாது என்பதில் கவனம் தேவை.

No comments:

Post a Comment