Islamic Widget

January 30, 2011

பரங்கிப்பேட்டை அருகே தனியார் மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் 11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே தனியார் மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் அடுத்த மாதம் 11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் கிராமத்தில் தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சுமார் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலத்தை அந்த நிறுவனம் குறைந்த விலைக்கு விற்பனை செய்துவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த மின் உற்பத்தி நிலையம் வந்தால் தங்களுடைய மீன்பிடி தொழில், விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சிதம்பரம் ஆர்.டி.ஓ. இந்துமதி தலைமையில் நடந்து வந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் நேற்று புதுக்குப்பம், கரிக்குப்பம், பஞ்சங்குப்பம் உள்பட கிராம விவசாயிகள், அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பி.முட்லூரில் நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அருண் மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணி வாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நுகர்வோர் பேரவை மாவட்ட செயலாளர் நிஜாமுதீன் கலந்து கொண்டு பரங்கிப்பேட்டை பகுதியில் மின் உற்பத்தி நிலையம் அமைந்தால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பாதிக்கப்படும் நிலை குறித்து பேசினார்.
கூட்டத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், பாண்டியன், ஒன்றிய பேரவை செயலாளர் ராசாங்கம், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜ், அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி உமாமகேஸ்வரன், நகர செயலாளர் செல்வக்குமார் மற்றும் கரிக்குப்பம் சண்முகம், பரமானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் கிராமத்தில் மின்உற்பத்தி நிலையம் அமைத்தால் மீனவர்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே இதை கண்டித்து அடுத்த மாதம் 11-ந் தேதி சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.


Source: Daily Thanthi



No comments:

Post a Comment