Islamic Widget

November 06, 2010

சிவசேனா -- மூன்றாம் எடிசன் - 2

மாநிலவெறி, மண்ணின் மைந்தர், காவிச்சிந்தனை எனப் பல முகங்கள் காட்டினாலும் பால்தாக்கரேய்க்கும் சிவசேனாவுக்கும் அவை சுயநலத்திற்கான பல முகமூடிகள்தாம்.


 மராட்டியர் அல்லாதவர்களை, பம்பாயிலிருந்து விரட்டும் கொள்கையுடைய சிவசேனா, தென்னிந்தியர்களையும் வட இந்தியர்களையும் குறிவைத்ததுபோல், குஜராத்தி, மார்வாடி வணிகர்களையும் தொழில் அதிபர்களையும் பகைத்துக் கொள்வதில்லை; "மராட்டியர்களுக்கு அவர்கள் வேலை தருகிறார்கள்" என்ற காரணத்தையும் சொல்லிக் கொள்வர் சிவசைனிகர்.
அகில இந்தியாவிலும் இருந்த ஜனநாயக சக்திகள் ஒருமித்த குரலில் எதிர்த்த நெருக்கடி நிலையை ஆதரித்ததன் மூலம், தன் மீதான தடையிலிருந்தும் கைதுகளிலிருந்தும் தன்னைக் காத்துக் கொண்டது சிவசேனா! ஆர் எஸ் எஸ் தடை செய்யப்பட்டது போல அதன் காவிக் கூட்டாளியான சிவசேனாவும் தடை செய்யப்பட்டு விடும் என்ற அச்சம் நிலவியபோது, தம் காவித் தலைமையை ஒதுக்கி வைத்துவிட்டு, தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நெருக்கடி நிலையை வரவேற்றார் பால்தாக்கரே! உலகமே சபிக்கும் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரையும் இந்தியாவே சபிக்கும் நாதுராம் கோட்சேவையும் புகழ்ந்து துதிக்கும் பால்தாக்கரே, நெருக்கடி நிலையை வெளிப்படையாக ஆதரித்ததோடு மட்டுமின்றி, இந்திரா காந்தியையும் நெருக்கடிநிலைக்காலக் கதாநாயகனான சஞ்செய் காந்தியையும் வெகுவாகப் புகழ்ந்தார். நெருக்கடி நிலை நடப்பில் இருந்த காலம் முழுவதும் தனது வழக்கமான போராட்டங்களையும் கோரிக்கை முழக்கங்களையும்கூட நிறுத்தி வைத்துக் கொண்டது சிவசேனா!
நெருக்கடிநிலை ரத்துச் செய்யப்பட்டு, 1977ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பழைய காங்கிரஸ் என்றும் சிண்டிகேட் காங்கிரஸ் என்றும் ஊடகங்கள் பெயரிட்டிருந்த காங்கிரஸ் கட்சி, ஸம்யுக்த ஸோஷலிஸ்ட் கட்சி, ப்ரஜா ஸோஷலிஸ்ட் கட்சி, சுதந்திராக் கட்சி, பாரதீய லோக் தள், உட்படப் பல கட்சிகளுடன் ஆர் எஸ் எஸ்ஸின் அரசியல் பிரிவான ஜனசங்கம் கட்சியும் இணைந்து இந்திராகாந்திக்கெதிராக, ‘ஜனதாக் கட்சி’யை உருவாக்கித் தேர்தலைச் சந்தித்தனர். அத்தேர்தலில் சிவசேனா போட்டியிடவில்லை என்பதோடு காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காகத் தீவிரமாகத் தேர்தல் பணியும் ஆற்றியது. ஆனால் அத்தேர்தலில் ஜனதாக் கட்சி வென்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. எனினும் ஆர் எஸ் எஸ்ஸின் உறுப்பினர் தகுதியை இழக்க மாட்டோம் என்ற (ஜனசங்க)அமைச்சர்களாயிருந்த வாஜ்பாய் மற்றும் அத்வானியின் பிடிவாதத்தால் --”இரட்டை உறுப்பினர்” எனும் சர்ச்சையால் -- ஜனதா ஆட்சி கவிழ்ந்தது; கட்சியும் உடைந்தது. ஜனசங்கத்தினர் தனியாகப் பிரிந்து பாரதீய ஜனதாக் கட்சியைத் தொடங்கினர்.

ஜனதாக் கட்சி ஆட்சி கவிழ்ந்தபின் 1980ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வென்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இந்திராகாந்தி பல மாநில அரசுகளைக் கலைத்த போது மகாராஷ்டிர மாநில அரசையும் கலைத்தார். அங்கு நடந்த சட்டசபைத் தேர்தலிலும் சிவசேனா, காங்கிரஸுக்காக உழைத்தது. காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்வரானவர் ஒரு முஸ்லிம்!. ஆம்! அப்துல் ரகுமான் அந்துலே!
மீண்டும் காவிக் கூட்டணியில் இணையக் காத்திருந்த சிவசேனாவுக்கு வாய்ப்பாக அமைந்தது தமிழ்நாட்டில் மீனாட்சிபுரத்தில் நடந்த மதமாற்றம். அகில இந்தியாவையும் உற்று நோக்கச் செய்த இம்மத மாற்றத்தால் ஆர் எஸ் எஸ் மற்றும் வி எச் பி இரண்டும் அதிர்ந்தன. “…….வடகிழக்கு மாநிலங்களில் கிருத்துவ மிஷனரிகளின் மதமாற்றம்…. காஷ்மீரிலும் பஞ்சாபிலும் பிரிவினை கோரும் வன்முறை வெறியாட்டம்….. இந்தியாவுக்கும் இந்துக்களுக்கும் ஆபத்து….” என இவ்விரண்டு இயக்கங்களும் குரல் கொடுக்க, பால்தாக்கரே மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறிப்பேச்சைத் தொடங்கினார். முஸ்லிம்களை மிக எளிதில் கொந்தளிக்கச் செய்வதற்காக அவர்களின் புனிதரான முகமது நபியைப் பற்றிப் பால்தாக்கரே இழிவாகப் பேச, கொதித்துப்போன முஸ்லிம்கள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் கான் தலைமையில் பால்தாக்கரேயின் படத்துக்குச் செருப்பு மாலையிட்டுக் கண்டன ஊர்வலம் நடத்தினர். கோபமடைந்த சிவசேனாக் கட்சியினர் நடத்திய கலவரத்தில் 258 உயிர்களும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் அழிக்கப்பட்டன. காவல் துறையும் சிவசேனாவின் சார்பாக நடந்து கொண்டது. இக்கலவரத்திலும் பால்தாக்கரே மீதோ அவரது சகக் குற்றவாளிகள் மீதோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
1986 ஆம் ஆண்டு சிவசேனா அனுசரித்த காவிவாரமும் கலவரங்களை நடத்தியது. 1992ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர்மசூதியை இடித்ததிலும் அதைத் தொடர்ந்து நடந்த பம்பாய்க் கலவரத்திலும் சிவசேனைக்கு முக்கியப் பங்குண்டு.
எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் முஸ்லிம்களைத் தாக்குவதற்குப் பாலதாக்கரே முன்னணியில் நிற்பார். நெருக்கடிநிலைக் காலத்தில் இந்தியாவின் தலைநகரான டில்லியிலிருந்து முஸ்லிம்களைத் துரத்தும் நடவடிக்கையில் தீவிரமாகச் செயல்பட்டு டில்லி ஜுமா மசூதியில் துப்பாக்கிச்சூடுவரை நடத்திய சஞ்செயைப் பாராட்டியதுபோல, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது சஞ்செய் காந்தியின் மகன் வருண் காந்தி "முஸ்லிம்களின் கையை வெட்டுவேன்" என முழங்கியபோது வருணின் பேச்சை வரவேற்றுப் பாராட்டினார். இதோ, இப்போது உலகெங்கும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவுக்கு எதிராகவும் பால்தாக்கரே குரல் கொடுத்தாயிற்று!
தனது காவிச்சாயம் கலையாமல் காத்துக் கொள்ளும் பால்தாக்கரேயும் சிவசேனாவும் கருத்துச் சுதந்திரம் என்பது தங்களுக்கு மட்டுமே சொந்தம்; யாரைப்பற்றியும் எதையும் பேசலாம்; எழுதலாம் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருவதை அவர்களது பேச்சுக்களும் எழுத்துக்களும் நிரூபித்து வந்துள்ளன! ஆனால் பால்தாக்கரேய்க்கோ சிவசேனாவுக்கோ எதிராக யாராவது பேசினாலோ எழுதினாலோ, கருத்துச் சுதந்திரம், ஊடக உரிமை என்பவையெல்லாம் மறந்துவிடும் சிவசைனிகருக்கு; பேசியவர், எழுதியவர் மீது கடும் தாக்குதலைத் தொடுப்பர்.!
மகாரஷ்டிரமாநில அரசு, பாபாசாகிப் அம்பேத்கரின் நூல்களை வெளியிடும் திட்டத்தில், “Riddles in Hinduism” எனும் அம்பேத்கரின் ஆக்கத்தை வெளியிட்டது. உடனே சிவசேனா களத்தில் இறங்கியது. அம்பேத்கரின் நூல் இந்து மதத்தையும் இந்துக் கடவுளரையும் அவமதிப்பதாகக் கூறி உடனே அந்நூலைத் தடை செய்யுமாறு பெரும் கண்டனப் பேரணியை நடத்திய சிவசேனா, அம்பேத்கரையும் தலித்களையும் இழிவு படுத்திப் பேசிக் கருத்துச் சுதந்திரத்துக்கு மரியாதை(!) செலுத்தியது..

தனக்கு எதிரான விமர்சனங்களையோ கருத்துகளையோ பொறுத்துக் கொள்ளாத சிவசேனா, மம்ரிக் மற்றும் சாம்னா இதழ்கள் மூலம் பத்திரிகையாளார்கள்மீது எழுத்துத் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தாலும் நேரடியாக அவர்களைத் தாக்குவதற்கும் தயங்கியதில்லை.
பம்பாயின் வாங்கடே ஸ்டேடியத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட இருந்த கிரிக்கெட் திடலை சிவசேனாக் குரங்குப்படை குழிகளைத் தோண்டிச் சேதப்படுத்தியது. இதைக் கண்டித்துக் கடுமையான தலையங்கம் எழுதிய 'மகாநகர்' எனும் மராத்தி மொழி இதழின் அலுவலகத்தைத் தாக்கியது சிவசேனா! பத்திரிகையின் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அராஜகத் தாக்குதலைக் கண்டித்துப் பத்திரிகையாளர்கள் நடத்திய ஊர்வலத்தில் சிவசைனிகர் கல்வீச்சு நடத்தியும் இரண்டு பெண்கள் உட்பட மூவரைக் கடுமையாகத் தாக்கியும் பத்திரிகையாளர்களைக் காயப்படுத்தினர். அவர்களுள் மணிமாலா என்ற ஒரு பெண் பத்திரிகையாளாரின் தலையில் இரும்புத் தடியால் அடித்து அவரது மண்டை ஓட்டைச் சிதைத்தனர். சிவசேனாவின் ரவுடித்தனத்தைத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கண்டித்த பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பற்றித் தன் பத்திரிகையில் மிக இழிவாகவும் கீழ்த்தரமாகவும் எழுதியதோடு மட்டுமின்றிப் பெண் பத்திரிகையாளர்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று தலையங்கமும் தீட்டி மகிழ்ந்தது சிவசேனா.
இரண்டாண்டுகளுக்குப் பின் மீண்டும் மகாநகர் இதழ் ஆசிரியரைத் தாக்கினர் சிவசைனிகர். அடுத்த ஆறு மாதத்திற்குள் பால்தாக்கரேயின் நேரடிக் கண்காணிப்பில் பத்திரிகையாளர்கள் பன்னிருவர் தாக்கப்பட்டனர். தொடர்ந்து, மராத்தி மொழியில் அதிகமாக விற்பனையாகும் பத்திரிகையான 'லோக்மத்' இதழின் அலுவலகத்தையும் சிவசேனாவினர் சூறையாடிக் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்தனர். “நான் ஓர் இந்தியன்” என்று சொல்லும் சுதந்திரத்தைக்கூட மறுக்கும் கேவலமான பிறவி பால்தாக்கரே! கிரிக்கெட் வீரர் சச்சின், "நான் ஓர் இந்தியன்; மும்பை அனைவருக்கும் சொந்தமானது" என்று கருத்துக் கூறியதற்காக, "மராத்தியர்களின் மனம் என்னும் பிட்சில் சச்சின் ரன் அவுட் ஆகிவிட்டார்" என்றும் "அவர் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்; அரசியல் விளையாட்டில் அவர் ஈடுபடுவது சரியில்லை" என்றும் பால்தாக்கரே சாம்னா இதழில் தலையங்கத்தில் சச்சினைச் சாடிக் கடுமையாக எழுதியிருந்தார்.
தனிநபர் தம் வாழ்க்கைத் துணையைத் தேடும் விஷயத்தில்கூடப் பிறரின் உரிமையை விமர்சிப்பது இன்னும் கேவலமானது! இந்தியாவின் டென்னிஸ் தாரகை சானியா மிர்ஸா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை மணம் செய்துகொண்டதற்குக்கூட எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தினர் சிவசைனிகர்.
பாட்டன் பால்தாக்கரேயைப் போலவே கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்காதவர் ஆதித்யதாக்கரே! அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் ஜேம்ஸ் லாயின் (James W. Laine) என்பவர் எழுதிய Shivaji: Hindu King in Islamic India என்ற நூலைத் தீயிட்டுக் கொளுத்தச் சொன்ன தாத்தா பால்தாக்கரேவின் வழியில், ரோஹிந்தன் மிஸ்த்ரி (Rohinton Mistry) எழுதிய Such a Long Journy எனும் நாவலை சிவசேனாவின் மாணவர் பிரிவான ‘பாரதீய வித்யார்த்தி சேனா’ மூலம் எரித்தார் ஆதித்யதாக்கரே! ("ரோஹிந்தனின் அதிர்ஸ்டம், அவர் கானடாவில் இருக்கிறார்; இங்கே இருந்திருப்பார் எனில் அவரையும் கொளுத்தியிருப்போம்" என்று பாரதீய வித்யார்த்தி சேனாவின் அங்கமான ஒருவன் டி.வி. கேமிராவின்முன் தைரியமாகச் சொன்னான்.) மும்பைப் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து ரோஹிந்தன் மிஸ்த்ரியின் நாவலை அகற்றும்படி, இருபத்துநான்கு மணி நேரக் காலக்கெடு கொடுத்து ஆதித்ய தாக்கரே நடத்திய அதிரடிப் போராட்டமும் அதற்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணிந்ததும் ஆதித்யாவைச் சிவசேனாவின் இளைஞர் அணியின் தலைவர் பொறுப்புக்குப் பால்தாக்கரே நியமித்ததன் பின்னணியாக இருக்கலாம். பால்தாக்கரேயுடன் பிணங்கிக் கொண்டு, சிவசேனாவுக்குப் போட்டியாக, பால்தாக்கரேயின் கொள்கைகளைத் தாங்கித் தனியாக, ‘மகாராஷ்ட்ர நவநிர்மான் சேனா’வைத் தொடங்கி நடத்தும் ராஜ்தாக்கரேயின் தலைமையில்தான் முன்னர் இயங்கியது பாரதீய வித்யார்த்தி சேனா. அப்போது ராஜ்தாக்கரேயால் கவரப்பட்டு அவரின் தலைமையில் அணிவகுத்திருந்த மாணவர்களும் இளைஞர்களும் இப்போது அவரின் ‘மகாராஷ்ட்ர நவநிர்மான் சேனா’வில் பெருமளவில் இணைந்துள்ளனர். கடந்த 2009 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 6 % வாக்குகளைப் பிரித்து, இனி பாஜக - சிவசேனா ஆட்சி என்பது பகல் கனவோ என எண்ணும் அளவுக்கு ராஜ்தாக்கரேயால் ஏற்பட்ட பாதிப்பு, இனி வரும் தேர்தல்களில் சிவசேனாவுக்கு ஏற்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் இளைஞர்களைக் கவருவதற்காக ஆதித்ய தாக்கரேயை யுவசேனாவின் தலைவராக நியமித்துள்ளார் பால்தாக்கரே!
சிவசேனாவின் முதல் எடிஷனான பால்தாக்கரேயின் திருத்தப்படாத பதிப்பாகவே மூன்றாம் எடிஷனான ஆதித்யதாக்கரே இந்த ஆண்டின் தசராவில் வெளிவந்து இருப்பது, சிவசேனாவில் எவ்வித மாற்றத்தையும் திருத்தத்தையும் யாரும் எதிர்பார்க்கக் கூடாது என்ற செய்தியைத்தான் கூறுகிறது என்பது இதுவரையிலான அதன் நடவடிக்கைகள் நாட்டுக்கு உணர்த்தும் பாடம்.

- அலசல் By ரஸ்ஸல்

No comments:

Post a Comment