Islamic Widget

October 10, 2010

மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முடிக்க வேண்டிய சிதம்பரம் புறவழிச்சாலை பணி: முதல்வர் கவனிப்பாரா?

சிதம்பரம் : உலக வங்கி நிதி உதவியுடன் துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டிருக்க வேண்டிய சிதம்பரம் புறவழிச்சாலை மீது தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்.


உலக வங்கி நிதியுதவிடன், தமிழ் நாடு சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை முதல் தூத் துக்குடி வரை 13 புறவழிச் சாலைகளை அமைக்க திட்டமிட்டு அதற் காக 2,200 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டது. விருத்தாசலம், நாகை, திருவண்ணாமலை ஆகிய மூன்று கோட்டங்களாக புறவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2004ம் ஆண்டு துவங்கியது.

அதில் சிதம்பரம் புறவழிச்சாலையும் ஒன்று. 17 கி.மீ., 61 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 2004ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் துவங்கியது. ஒப்பந்தப்படி 2007ம் ஆண்டே முடிந்து பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டிய சாலை ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணி முடியாமல் சாலை பயன்பாட்டிற்கு வருவதில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடித்து வருகிறது. 2010 ஜூன் மாதத்திற்குள் கண்டிப்பாக திறந்து விடப்படும் என உறுதியாக தெரிவித்தும் கூட இதுவரை அதற் கான எந்த முகாந்திரமும் இல்லை.
சிதம்பரம் அருகே சி.முட்லூர்- கடவாச்சேரி வரை 17 கி.மீ., புறவழிச்சாலை அமைக்கும் பணி முற்றிலுமாக முடிந்து விட்டது. ஆனால் இணைப்புச் சாலை அமைப்பதில் இழுபறி நிலை இருந்து அதுவும் முடிந்து விட்டது. இருந்தும் இதுவரை பயன்பாட்டிற்கு திறந்து விடப்படவில்லை. விரைவில் புறவழிச்சாலை பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டால் சிதம்பரம் நகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைவதுடன், பயண நேரமும் குறையும். கனரக வாகன போக்குவரத்து அதிகரித்து அதன் மூலம் பின்தங்கிய மாவட்டங்களான நாகை, திருவாரூர் உள்ளிட்ட பகுதியில் தொழில் வளம் பெருகவும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் வாய்ப்பு ஏற்படும்.
அதேப் போன்று சிதம்பரம் அருகே 2006ம் ஆண்டு முடிந்திருக்க வேண்டிய நாகை மாவட்டத்திற் குட்பட்ட அரசூர் - செங்கமேடு வரையிலான 8 கி.மீ., புறவழிச்சாலை பணியும் பனமங்கலம் உப்பனாற்றில் ரயில்வே பாலம் அமைக்கும் பணியால் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுகிறது.
சிதம்பரம் புறவழிச்சாலைக்கு பிறகு துவக்கப்பட்ட பல சாலைகள் பயன்பாட்டிற்கு வந்து பழைய சாலையாகி விட்ட நிலையில், சிதம்பரம், சீர்காழி புறவழிச்சாலை பணி ஒப்பந்த காலம் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் கூட முடிவுக்கு வரவில்லை. எனவே தமிழக முதல்வர் புறவழிச்சாலை பணியில் கவனம் செலுத்தி விரைவில் பயன்பாட்டிற்கு திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
Source:  Dinamalar

No comments:

Post a Comment