Islamic Widget

August 20, 2010

இருப்பிட சான்றுக்காக தரப்படும் புதிய ரேஷன் கார்டுகள் மஞ்சள் கலரில் தயாரிப்பு: குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு கிடையாது


ரேஷன் கார்டு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு எவ்வளவு அவசியமோ அதைவிட மற்ற காரியங்களுக்கு அவசியமாக கருதப்படுகிறது.

புதிய கியாஸ் இணைப்பு, பாஸ்போர்ட், சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வங்கி கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு குடும்ப அட்டை தேவைப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பணிகளுக்கு ரேஷன் கார்டு தேவைப்படுவதால் அதை அடையாள அட்டையாக வழங்க அரசு முடிவு செய்தது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள், பொருட்கள் வாங்க விரும்பாதவர்கள் இத்தகைய கார்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த ரேஷன் கார்டுக்கு “என் கார்டு” என்று பெயர். இந்த குடும்ப அட்டையை கொண்டு ரேஷனில் பொருட்கள் வாங்க இயலாது. புதிய “என் கார்டு” பெற விரும்புபவர்கள் ரூ.100 செலுத்தி விண்ணப்பம் பெறவேண்டும். விண்ணப்பித்த 7-வது நாளில் ரேஷன் கார்டு வழங்கப்படும்.

விண்ணப்பத்துடன் வசிப்பதற்கான எதாவது ஒரு சான்று இணைத்தால் போதுமானது. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு முகவரி, மின்சார வாரிய அட்டை, சொத்து வரி அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வழங்கும்போது ஒரு டோக்கன் வழங்கப்படும். விண்ணப்பித்த 2-வது நாளில் அந்த முகவரிக்கு அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். 7-வது நாளில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

இந்த புதிய “என் கார்டு” குடும்ப அட்டை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஏற்கனவே ரேஷன் கார்டு உள்ளவர்களும் அதில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களும் இந்த என் கார்டை பெற முடியாது. இந்த கார்டை பெற்றவர்கள் பொருட்கள் வாங்க கூடிய குடும்ப அட்டையாக மாற்றம் செய்ய இயலாது. என் கார்டில் உள்ள பெயர்களை நீக்கலாம்.

ஆனால் அதில் உள்ள பெயரை பொருட்கள் வாங்க கூடிய ரேஷன் கார்டுக்கு மாற்ற முடியாது. இதை ஒரு அடையாள அட்டையாகவே மட்டுமே பயன்படுத்த முடியும்.

புதிய என் கார்டு மஞ்சள் கலரில் வழங்கப்படுகிறது. இதுவரை மஞ்சள் கலரில் ரேஷன் கார்டு எந்த பிரிவினருக்கும் வழங்கப்படவில்லை. வெள்ளை, பச்சை, காக்கி போன்ற கலரில் மட்டும் வழங்கப்பட்டு உள்ளது. மற்ற கார்டுகளில் இருந்து வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக மஞ்சள் கலரில் அச்சடிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் என் கார்டு வழங்கும் பணி தொடங்கிவிட்டது. விண்ணப்பப்படிவம் இணைய தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment